சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
8.125   மாணிக்க வாசகர்    திருவாசகம்   ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்
பண் - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/25 Asaipatthu Thiruvasagam.mp3
Audio: https://sivaya.org/thiruvasagam2/25 Aasai pathu.mp3
8.126   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்
பண் - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/26 Athisayapatthu Thiruvasagam.mp3
8.127   மாணிக்க வாசகர்    திருவாசகம்   புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை
பண் - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvasagam2/27 Punarchip pathu.mp3
8.141   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அற்புதப்பத்து - மைய லாய்இந்த
பண் - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/41 Arputhapathu Thiruvasagam.mp3

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.125   ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்  
பண் - கருடக்கொடியோன்   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அறுசீர் விருத்தம்
கருளக் கொடியோன் காணமாட்டாக் கழல் சேவடி என்னும்
பொருளைத் தந்து, இங்கு, என்னை ஆண்ட பொல்லா மணியே! ஓ!
இருளைத் துரந்திட்டு, இங்கே வா' என்று, அங்கே, கூவும்
அருளைப் பெறுவான், ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

[1]
மொய்ப்பால் நரம்பு கயிறு ஆக, மூளை, என்பு, தோல், போர்த்த
குப்பாயம் புக்கு, இருக்ககில்லேன்; கூவிக்கொள்ளாய்; கோவே! ஓ!
எப்பாலவர்க்கும் அப்பால் ஆம் என் ஆர் அமுதே! ஓ!
அப்பா! காண ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
[2]
சீ வார்ந்து, ஈ மொய்த்து, அழுக்கொடு திரியும் சிறு குடில் இது சிதையக்
கூவாய்; கோவே! கூத்தா! காத்து ஆட்கொள்ளும் குரு மணியே!
தேவா! தேவர்க்கு அரியானே! சிவனே! சிறிது என் முகம் நோக்கி,
ஆ! ஆ!' என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

[3]
மிடைந்து எலும்பு, ஊத்தை மிக்கு, அழுக்கு ஊறல், வீறு இலி, நடைக் கூடம்
தொடர்ந்து எனை நலைய, துயர் உறுகின்றேன்; சோத்தம்! எம் பெருமானே!
உடைந்து, நைந்து, உருகி, உள் ஒளி நோக்கி, உன் திரு மலர்ப் பாதம்
அடைந்து நின்றிடுவான், ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

[4]
அளி புண் அகத்து, புறம் தோல் மூடி, அடியேன் உடை யாக்கை,
புளியம்பழம் ஒத்து இருந்தேன்; இருந்தும், விடையாய்! பொடி ஆடீ!
எளிவந்து, என்னை ஆண்டுகொண்ட என் ஆர் அமுதே! ஓ!
அளியேன்' என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

[5]
எய்த்தேன் நாயேன்; இனி இங்கு இருக்ககில்லேன்; இவ் வாழ்க்கை
வைத்தாய்; வாங்காய்; வானோர் அறியா மலர்ச் சேவடியானே!
முத்தா! உன் தன் முக ஒளி நோக்கி, முறுவல் நகை காண,
அத்தா! சால ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

[6]
பாரோர், விண்ணோர், பரவி ஏத்தும் பரனே! பரஞ்சோதி!
வாராய்; வாரா உலகம் தந்து, வந்து ஆட்கொள்வானே!
பேர் ஆயிரமும் பரவித் திரிந்து, எம் பெருமான்' என ஏத்த,
ஆரா அமுதே! ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

[7]
கையால் தொழுது. உன் கழல் சேவடிகள் கழுமத் தழுவிக்கொண்டு,
எய்யாது என் தன் தலை மேல் வைத்து, எம் பெருமான்!', பெருமான்!' என்று,
ஐயா! என் தன் வாயால் அரற்றி, அழல் சேர் மெழுகு ஒப்ப,
ஐயாற்று அரசே! ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

[8]
செடி ஆர் ஆக்கைத் திறம் அற வீசி, சிவபுர நகர் புக்கு,
கடி ஆர் சோதி கண்டுகொண்டு, என் கண் இணை களி கூர,
படி தான் இல்லாப் பரம்பரனே! உன் பழ அடியார் கூட்டம்,
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

[9]
வெம், சேல் அனைய கண்ணார் தம் வெகுளி வலையில் அகப்பட்டு,
நைஞ்சேன், நாயேன்; ஞானச் சுடரே! நான் ஓர் துணை காணேன்;
பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா! பவளத் திருவாயால்,
அஞ்சேல்' என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.126   அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்  
பண் - கருடக்கொடியோன்   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அறுசீர் விருத்தம்
வைப்பு, மாடு, என்று; மாணிக்கத்து ஒளி என்று; மனத்திடை உருகாதே,
செப்பு நேர் முலை மடவரலியர்தங்கள் திறத்திடை நைவேனை
ஒப்பு இலாதன, உவமனில் இறந்தன, ஒள் மலர்த் திருப் பாதத்து
அப்பன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

[1]
நீதி ஆவன யாவையும் நினைக்கிலேன்; நினைப்பவரொடும் கூடேன்;
ஏதமே பிறந்து, இறந்து, உழல்வேன் தனை என் அடியான்' என்று,
பாதி மாதொடும் கூடிய பரம்பரன், நிரந்தரமாய் நின்ற
ஆதி ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

[2]
முன்னை என்னுடை வல் வினை போயிட, முக்கண் அது உடை எந்தை,
தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன், எளியவன் அடியார்க்கு,
பொன்னை வென்றது ஓர் புரி சடை முடி தனில் இள மதி அது வைத்த
அன்னை, ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

[3]
பித்தன்' என்று, எனை உலகவர் பகர்வது ஓர் காரணம் இது கேளீர்:
ஒத்துச் சென்று, தன் திருவருள் கூடிடும் உபாயம் அது அறியாமே,
செத்துப்போய், அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை,
அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

[4]
பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன்; பல் மலர் பறித்து ஏத்தேன்;
குரவு வார் குழலார் திறத்தே நின்று, குடி கெடுகின்றேனை
இரவு நின்று, எரி ஆடிய எம் இறை, எரி சடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே.

[5]
எண்ணிலேன் திருநாமம் அஞ்சு எழுத்தும்; என் ஏழைமை அதனாலே
நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு; நல் வினை நயவாதே,
மண்ணிலே பிறந்து, இறந்து, மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை,
அண்ணல், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

[6]
பொத்தை ஊன் சுவர்; புழுப் பொதிந்து, உளுத்து, அசும்பு ஒழுகிய, பொய்க் கூரை;
இத்தை, மெய் எனக் கருதிநின்று, இடர்க் கடல் சுழித்தலைப் படுவேனை
முத்து, மா மணி, மாணிக்க, வயிரத்த, பவளத்தின், முழுச் சோதி,
அத்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

[7]
நீக்கி, முன் எனைத் தன்னொடு நிலாவகை; குரம்பையில் புகப் பெய்து;
நோக்கி; நுண்ணிய, நொடியன சொல் செய்து; நுகம் இன்றி விளாக்கைத்து;
தூக்கி; முன் செய்த பொய் அறத் துகள் அறுத்து; எழுதரு சுடர்ச் சோதி
ஆக்கி; ஆண்டு; தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

[8]
உற்ற ஆக்கையின் உறு பொருள், நறு மலர் எழுதரு நாற்றம் போல்,
பற்றல் ஆவது ஓர் நிலை இலாப் பரம் பொருள்: அப் பொருள் பாராதே,
பெற்றவா பெற்ற பயன் அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே,
அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

[9]
இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச் சிறு குடில், இது: இத்தைப்
பொருள் எனக் களித்து, அரு நரகத்திடை விழப் புகுகின்றேனை
தெருளும் மும்மதில், நொடி வரை இடிதர, சினப் பதத்தொடு செம் தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.127   புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை  
பண் - கருடக்கொடியோன்   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
ஆசிரிய விருத்தம்
சுடர் பொன் குன்றை, தோளா முத்தை, வாளா தொழும்பு உகந்து
கடை பட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனை, கரு மால், பிரமன்,
தடை பட்டு, இன்னும் சாரமாட்டாத் தன்னைத் தந்த என் ஆர் அமுதை,
புடை பட்டு இருப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

[1]
ஆற்றகில்லேன் அடியேன்; அரசே! அவனி தலத்து ஐம் புலன் ஆய
சேற்றில் அழுந்தாச் சிந்தை செய்து, சிவன், எம்பெருமான்,' என்று ஏத்தி,
ஊற்று மணல் போல், நெக்கு நெக்கு உள்ளே உருகி, ஓலம் இட்டு,
போற்றிப் புகழ்வது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

[2]
நீண்ட மாலும், அயனும், வெருவ நீண்ட நெருப்பை, விருப்பிலேனை
ஆண்டு கொண்ட என் ஆர் அமுதை, அள்ளூறு உள்ளத்து அடியார் முன்
வேண்டும்தனையும் வாய் விட்டு அலறி, விரை ஆர் மலர் தூவி,
பூண்டு கிடப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

[3]
அல்லிக் கமலத்து அயனும், மாலும், அல்லாதவரும், அமரர் கோனும்,
சொல்லிப் பரவும் நாமத்தானை, சொல்லும் பொருளும் இறந்த சுடரை,
நெல்லிக் கனியை, தேனை, பாலை, நிறை இன் அமுதை, அமுதின் சுவையை,
புல்லிப் புணர்வது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

[4]
திகழத் திகழும் அடியும் முடியும் காண்பான், கீழ் மேல், அயனும் மாலும்,
அகழப் பறந்தும், காணமாட்டா அம்மான், இம் மா நிலம் முழுதும்
நிகழப் பணி கொண்டு, என்னை ஆட்கொண்டு, ஆ! ஆ!' என்ற நீர்மை எல்லாம்
புகழப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

[5]
பரிந்து வந்து, பரம ஆனந்தம், பண்டே, அடியேற்கு அருள்செய்ய,
பிரிந்து போந்து, பெரு மா நிலத்தில் அரு மால் உற்றேன், என்று என்று,
சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர், உரோமம் சிலிர்ப்ப, உகந்து அன்பு ஆய்,
புரிந்து நிற்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

[6]
நினையப் பிறருக்கு அரிய நெருப்பை, நீரை, காலை, நிலனை, விசும்பை,
தனை ஒப்பாரை இல்லாத் தனியை, நோக்கி; தழைத்து; தழுத்த கண்டம்
கனைய; கண்ணீர் அருவி பாய; கையும் கூப்பி, கடி மலரால்
புனையப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

[7]
நெக்கு நெக்கு, உள் உருகி உருகி, நின்றும், இருந்தும், கிடந்தும், எழுந்தும்,
நக்கும், அழுதும், தொழுதும், வாழ்த்தி; நானா விதத்தால் கூத்து நவிற்றி;
செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கி; சிலிர் சிலிர்த்து;
புக்கு நிற்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

[8]
தாதாய், மூ ஏழ் உலகுக்கும் தாயே, நாயேன் தனை ஆண்ட
பேதாய், பிறவிப் பிணிக்கு ஓர் மருந்தே, பெரும் தேன் பில்க, எப்போதும்
ஏது ஆம் மணியே!' என்று என்று ஏத்தி, இரவும் பகலும், எழில் ஆர் பாதப்
போது ஆய்ந்து, அணைவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

[9]
காப்பாய், படைப்பாய், கரப்பாய், முழுதும்; கண் ஆர் விசும்பின் விண்ணோர்க்கு எல்லாம்
மூப்பாய்; மூவா முதலாய் நின்ற முதல்வா; முன்னே எனை ஆண்ட
பார்ப்பானே; எம் பரமா!' என்று, பாடிப் பாடிப் பணிந்து, பாதப்
பூப் போது அணைவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.141   அற்புதப்பத்து - மைய லாய்இந்த  
பண் - கருடக்கொடியோன்   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அறுசீர் விருத்தம்
மையல் ஆய், இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டு,
தையலார் எனும் சுழித்தலைப் பட்டு, நான் தலை தடுமாறாமே,
பொய் எலாம் விட, திருவருள் தந்து, தன் பொன் அடி இணை காட்டி,
மெய்யன் ஆய், வெளி காட்டி, முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே!

[1]
ஏய்ந்த மா மலர் இட்டு, முட்டாதது ஓர் இயல்பொடும் வணங்காதே,
சாந்தம் ஆர் முலைத் தையல் நல்லாரொடும் தலை தடுமாறு ஆகி,
போந்து, யான் துயர் புகாவணம் அருள்செய்து, பொன் கழல் இணை காட்டி,
வேந்தன் ஆய், வெளியே, என் முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பனே!

[2]
நடித்து, மண்ணிடை; பொய்யினைப் பல செய்து; நான், எனது, எனும் மாயம்
கடித்த வாயிலே நின்று; முன் வினை மிகக் கழறியே திரிவேனை,
பிடித்து, முன் நின்று, அப் பெரு மறை தேடிய அரும் பொருள், அடியேனை
அடித்து அடித்து, அக்காரம் முன் தீற்றிய அற்புதம் அறியேனே!

[3]
பொருந்தும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது; பொய்களே புகன்று போய்;
கரும் குழலினார் கண்களால் ஏறுண்டு; கலங்கியே கிடப்பேனை;
திருந்து சேவடிச் சிலம்பு அவை சிலம்பிட, திருவொடும் அகலாதே,
அரும் துணைவன் ஆய், ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!

[4]
மாடும், சுற்றமும், மற்று உள போகமும், மங்கையர் தம்மோடும்
கூடி, அங்குள குணங்களால் ஏறுண்டு, குலாவியே திரிவேனை,
வீடு தந்து, என் தன் வெம் தொழில் வீட்டிட, மென் மலர்க் கழல் காட்டி,
ஆடுவித்து, எனது அகம் புகுந்து, ஆண்டது ஓர் அற்புதம் அறியேனே!

[5]
வணங்கும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது, மங்கையர் தம்மோடும்
பிணைந்து, வாய் இதழ்ப் பெரு வெள்ளத்து அழுந்தி, நான் பித்தனாய்த் திரிவேனை,
குணங்களும், குறிகளும், இலாக் குணக் கடல் கோமளத்தொடும் கூடி,
அணைந்து வந்து, எனை ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!

[6]
இப் பிறப்பினில், இணை மலர் கொய்து, நான் இயல்பொடு அஞ்சு எழுத்து ஓதி,
தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது, நான், தட முலையார் தங்கள்
மைப்பு உலாம் கண்ணால், ஏறுண்டு கிடப்பேனை, மலர் அடி இணை காட்டி,
அப்பன், என்னை, வந்து, ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!

[7]
ஊசல் ஆடும் இவ் உடல் உயிர் ஆயின இரு வினை அறுத்து, என்னை,
ஓசையால் உணர்வார்க்கு உணர்வு அரியவன், உணர்வு தந்து, ஒளி ஆக்கி,
பாசம் ஆனவை பற்று அறுத்து, உயர்ந்த தன் பரம் பெரும் கருணையால்
ஆசை தீர்த்து, அடியார் அடிக் கூட்டிய அற்புதம் அறியேனே!

[8]
பொச்சை ஆன இப் பிறவியில் கிடந்து, நான், புழுத்து அலை நாய்போல,
இச்சை ஆயின ஏழையர்க்கே செய்து, அங்கு இணங்கியே திரிவேனை,
விச்சகத்து, அரி, அயனும் எட்டாத, தன் விரை மலர்க் கழல் காட்டி,
அச்சன், என்னையும் ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!

[9]
செறியும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது, செறி குழலார் செய்யும்
கிறியும், கீழ்மையும், கெண்டை அம் கண்களும், உன்னியே கிடப்பேனை,
இறைவன், எம்பிரான், எல்லை இல்லாத தன் இணை மலர்க் கழல் காட்டி,
அறிவு தந்து, எனை ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list